ஸ்தம்பித்த திருச்சி. திணறிய தஞ்சை..காவிரிக்காக தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம், ரயில் மறியல்
திருச்சி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை பங்கிட்டு அளிப்பதில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.. பல ஆண்டுகளாகவே இந்த இழுபறி நீடித்து வரும்நிலையில், காவிரி விவகாரத்தில் 2 மாநில உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 11-ம் தேதி அன்றைய தினமும், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனாலும், தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு கறாராக சொல்லிவிட்டது.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்ததுடன், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கும் இன்றைய தினம் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
தீர்மானம்: அதன்படியே, இன்று காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கர்நாடகாவுக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. காவிரி நதிநீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவது என்றும் தமிழக அனைத்து கட்சிக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே, காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடதுசாரிகள் கட்சிகளின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.. இன்று தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் நடைபெற்றது